கோலாலம்பூர்,
மஇகா, தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்த நிலையில், அந்த முடிவை தடுத்து நிறுத்த போவதில்லை, அதன் உள் விவகாரங்களில் தலையிடுவதில் தனக்கு விருப்பமில்லை என அதன் தலைவர், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமட் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மஇகா மாநாட்டில், கூட்டணியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியுடன் சேரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, “அதன் பிரதிநிதிகள் மற்றும் தலைமையகம் எவ்வாறு முடிவு எடுத்தாலும், அதை திறந்த மனப்பான்மையுடன் நாம் ஏற்றுக்கொள்கிறோம், அவர்களின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டதை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன் ” என்று அவர் மேலும் கூறினார்.
மஇகாவின் இறுதி முடிவுக்கு முன் அதுகுறித்து ஆலோசனை நடக்குமா என அவரிடம் கேட்ட போது, அந்த அணுகுமுறைக்கு ஜாஹிட் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
“அது மிகச் சிறந்த நடைமுறை. இறுதியில் எந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கட்சியின் தீர்மானமே,” என்று அவர் கூறினார்.