நைரோபி:
வறுமை ஒழிப்பு மற்றும் மலிவு விலை வீட்டு வசதி வழங்குவதில் கென்யா காட்டும் வலுவான அர்ப்பணிப்பிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உயர்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த முயற்சிகளுக்கு அந்நாட்டின் தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு” என்று அவர் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கென்யாஅதிபர் வில்லியம் சமோய் ரூட்டோ வழங்கிய அரசு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு பேசுகையில், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டு வசதிகளை உருவாக்கும் கென்யாவின் திட்டம் உண்மையான தலைமைத்துவத்தை பிரதிபலிப்பதாக அன்வார் குறிப்பிட்டார். வறுமையை ஒழிப்பதில் கென்யாவின் அணுகுமுறைக்கு மலேசியாவின் முயற்சிகளுடன் ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழைகளை முன்னேற்றும் நோக்கில் அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் பயன்படுத்தும் கென்யாவின் கவனம், அந்நாட்டின் முதல் அதிபர் ஜோமோ கென்யாட்டா எடுத்துச் சென்ற மக்கள்நலக் கொள்கைகளின் உணர்வோடு இணைகிறது என்று பாராட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டில், மேலும் உயர்த்துவதற்கான சூழல் இருப்பதாக அன்வார் வலியுறுத்தினார். செமிகண்டக்டர் மற்றும் மின்சார-மின்னணு துறைகளில் மலேசியா தனது நிபுணத்துவத்தை கென்யாவுடன் பகிர்துகொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளின் தலைவர்களும் வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து திங்களன்று மேலும் கலந்துரையாடுவார்கள். நைரோபி விஜயத்திற்குப் பின், தனது மூன்று நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு அன்வார் மலேசியாவிற்கு திரும்ப உள்ளார்.