சென்னை:
கோயில்களின் நிதி, இந்து அறநிலையத்துறை சட்டத்தின் அனுமதிக்கப்பட்ட பிரிவுகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; அதற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு நிதி செலவிட்டால் பொறுப்புள்ளவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை (HR&CE) எச்சரித்துள்ளது.
சென்னையின் கந்தகோட்டம் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த வேளையில், இந்து அறநிலையத்துறை தனது நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்தில் விளக்கியது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பின்போது பல முக்கிய குறிப்பிடுகைகளை வெளியிட்டனர். அதில்,
கந்தகோட்டம் ஸ்ரீ முத்து குமாரசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தொடரலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது.
எனினும், அந்த கட்டுமானங்கள் அறநிலையத்துறை சட்டப்படி பக்தர்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்;
வணிகரீதியான பயன்பாட்டிற்கு மாற்றப்படக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், கோவில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களை அமைக்க முடியாது என்றும், இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயலும் அதிகாரிகள்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
நீதிமன்ற உத்தரவை மீறினால், தொடர்புடையவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.