Offline
Menu
இந்திய அரசியலமைப்பு தினம்: நாடாளுமன்றத்தில் இன்று கொண்டாட்டம் – ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
By Administrator
Published on 11/27/2025 08:16
News

புதுடெல்லி,ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார். அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த தினத்தை அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அரசியலமைப்பை வரைந்த அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இன்று நாடு முழுவதும் அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்நிலையில் ‘சம்விதான் திவாஸ்’ என இந்தியில் அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் இன்று நாடாளுமன்றம், மாநில சட்டசபைகள், கோர்ட்டுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியலமைப்பின் முகவுரைகள் வாசிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள்.

Comments