கோலாலம்பூர்
இன்று காலை நிலவரப்படி, தொடர்ச்சியான மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், 8,308 குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 மலேசியர்கள் தற்போது 142 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை மையம் NDCC தெரிவித்துள்ளது.
இந்த எட்டு மாநிலங்களில் கிளந்தான் 9,500-க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தவர்களுடன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பெர்லிஸ், பேராக், சிலாங்கூர், கெடா, திரெங்கானு, பினாங்கு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மண் சரிவுகள் மற்றும் நீரில் மூழ்கியச் சாலைகள் காரணமாக ஏராளமான சாலைகள் மூடப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டப் பகுதிகளில் கடுமையான வானிலை தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்தவும், அபாயகரமான மழை மற்றும் உயர்ந்த ஆற்று நீர்மட்டம் நீடிப்பதால் விழிப்புடன் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பல சவால்கள் இருந்த போதிலும் அவசரகாலச் சேவைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், தங்குமிடம் வழங்கவும், நிலைமைகளைக் கண்காணிக்கவும் சோர்வின்றிச் செயல்படுகின்றன.
மேலும் பல குடும்பங்கள் புயலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதால், அணை நீர்மட்டங்களும் வெளியேற்றும் முயற்சிகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.