நெகிரி செம்பிலானில் உள்ள நுசாரி பிஸ் செண்டாயனில் நடந்த ஒரு கொலை, கும்பல் வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
30 மற்றும் 40 வயதுடைய ஆண்கள் நவம்பர் 21 மற்றும் நவம்பர் 22 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரின் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைந்த வேளையில் அது நீட்டிக்க விண்ணப்பிக்கப்படும் என்றும், மற்ற இருவரின் தடுப்புக் காவல் வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது. 10 சாட்சிகளிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அல்சாஃப்னி கூறினார்.
சம்பவத்திற்கான காரணத்தை அவர்கள் இன்னும் கண்டறிய முயற்சிப்பதாகவும், ஆனால் நான்கு சந்தேக நபர்களுக்கும் வன்முறை, கொள்ளை, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார். உயிரிழந்தவருக்கு ஒரு குற்றப் பதிவு இருந்தது. இந்த சம்பவம் கும்பல் நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.