கோலாலம்பூர்
அனைத்துலக நிலையில் மகளிருக்கு எதிரான வன்முறைகள் தீர்க்கப்படும் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
மகளிருக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் நிறுத்துவதில் சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்தக் கொண்டாட்டம் முக்கியப் பங்கினை வகிக்கிறது என்று மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
நமது நாட்டில் மகளிருக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அரச மலேசிய காவல்துறையின் புள்ளிவிவர அறிக்கையின்படி கடந்த 2024ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம் 1,899 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையில் இவ்வாறான மொத்தம் 1,273 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தம் 7,116 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையில் மொத்தம் 5,041 சம்பவங்கள் புகார் செய்யப்பட்டிருக்கின்றன என்றார் அவர்.
மகளிர் சார்ந்த வன்முறைகளால் தனிப்பட்டவர்கள், குடும்பத்தினர், சமூகத்தினர், நாடு ஆகிய பலதரப்பும் சம்பந்தப்பட்டிருப்பதால் மகளிருக்கு எதிரான வன்முறைகளைக் களைவதில் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு முழுமையான கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
மகளிர் வன்முறைப் பிரச்சினைகளைக் கையாளுவதில் ஒருமித்த விழிப்புணர்வு குறிப்பாக ஆண்கள் தரப்பில் மிக அவசியமாகிறது.
மகளிருக்கு எதிரான வன்முறைகளைத் தீர்க்கும் தினத்தை அனுசரிப்பது தவிர்த்து மகளிர் ஆற்றலை ஊக்குவிப்பதற்காக அமைச்சின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நான்கு நிலை திட்டங்களும் அமல்படுத்தப்படுகின்றன.
மகளிரும் பொருளாதாரமும், மகளிரும் தலைமைத்துவமும், மகளிரும் வளப்பமும், மகளிரும் பாதுகாப்பும் என்ற நான்கு நிலைகளாகும் அவை.
மகளிர் மேம்பாட்டு இலாகாவின் வாயிலாகவும் அமைச்சு பல்வேறு இயக்கங்களை இதன் தொடர்பில் நடத்துகிறது. பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்ட ஆலோசனைத் திட்டங்கள், மகளிருக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரும் இயக்கங்களும் இதில் அடங்கும்.
சட்ட ஆலோசனைப்படியிலான திட்டம், 2022ஆம் ஆண்டு பாலியல் தொல்லைக்கு எதிரான சட்ட அமலாக்கம் அமைந்திருக்கிறது. சட்டம் 840 என்றறியப்படும் அந்தச் சட்டம் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வந்தது.
இதுவரையில் 11 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. அதில் ஐந்து பூஜ்ஜிய நிலை வன்முறை திட்டமாகும். மேலும் 6 அரசாங்க, தனியார் துறையினர் இணை ஏற்பாட்டில் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டவையாகும்.
வன்முறை சார்ந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக குடும்ப வன்முறை செயற்குழுவின் கீழ் சட்ட ஆற்றல் மேம்பாட்டு பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆலோசனைச் சேவைகளை வழங்குவது, மாத்தாஹரி திட்டம், ஸ்குவாட் வாஜா பிரிவை ஏற்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும் என்று நான்சி தெரிவித்தார்.
தங்களுக்கு நேரும் அநியாயம் பற்றிய விழிப்புணர்வை மகளிருக்கு ஏற்படுத்த ஐரிஸ் திட்டம் எனப்படும் சட்டப்பூர்வ எழுத்தாற்றலும் மகளிர் உரிமையும் திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.