கோலாலம்பூர்:
நேற்று இரவு நிலவரப்படி, ஒன்பது மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புத் தொடர்வதால் 29,000-க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இதில், கிளந்தான் அதிகபட்சமாக 11,120 பேரை, கோத்தா பாரு, தும்பாட், பாசிர் மாஸ் மற்றும் குவா மூசாங் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 66 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பேராக் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள 44 மையங்களில் 5,424 பாதிக்கப்பட்டோரும், கெடாவில் குபாங் பாசு மற்றும் கோத்தா சஸ்தார் பகுதிகளில் 21 மையங்களில் 4,142 பேரும், திரெங்கானுவில் 39 மையங்களில் 3,233 பேரும், பெர்லிஸில் 21 மையங்களில் 6,627 பேரும் தங்கியுள்ளனர்.
பகாங்கில் உள்ள லிப்பிஸில் ஒரு மையத்தில் 19 பாதிக்கப்பட்டோர் பதிவாகியுள்ளனர்.
ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சுங்கை கோலோக் மற்றும் லிமாவ் கஸ்தூரியில் உள்ள சுங்கை கலாஸ் ஆற்று நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது.
மேலும், கிளந்தானில் வயோதிக பெண் ஒருவர் வெள்ளத்தின் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இதனிடையே, தொடர்ச்சியான மழைக்கு மத்தியில், சமூகங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் நிவாரணம், உணவு உதவி மற்றும் மீட்புப் பணிகளைச் சோர்வின்றித் செய்து வருகின்றன.