கோலாலம்பூர்
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் RM1,000 பந்துவான் வாங்க் இசான் தொகையை விரைவாகவும், முறையாகவும் பெற்றுக் கொள்ள, தற்காலிக நிவாரண மையங்களில் உள்ள சமூக நலத் இலக்காவிடம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து, MyIBJKM செயலி மூலம் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சி நட்மா (Nadma)வின் தலைமை இயக்குநர் மீயோர் இஸ்மாயில் மீயோர் அகிம் நேற்று வலியுறுத்தினார்.
நிவாரண மையங்களில் JKMயிடம் பதிவு செய்து கொள்வது, குடும்பத் தலைவர்களைச் சரிபார்க்க முக்கிய நிபந்தனையாகும் என்று அவர் கூறினார்.
மேலும், பதிவு செய்யத் தவறினால் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
நிவாரணத் தொகை, செயலியில் புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு இணைய பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும் அல்லது வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு BSN வங்கிக் கிளைகளில் ரொக்கமாக வழங்கப்படும்.
இதனிடையே, BSN வங்கி, தொகை பெறவுள்ளவர்களுக்குக் குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கும்.
இதுகுறித்து மீயோர் இஸ்மாயில் மேலும் கூறுகையில், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அபாயம் உள்ளவர்களை கொண்டுள்ள குடும்பங்கள் வெள்ள அபாயம் தனியும் வரை பாதுகாப்பிற்காக நிவாரண மையங்களுக்கு (PPS) செல்லுமாறு அறிவுறுத்தினார்.
பெர்லிஸில் தொடர்ச்சியான மழை மற்றும் அசாதாரண வெள்ளம் இருந்தாலும், அனைத்து தரப்பினரும் தயாராக இருப்பதாகவும், களத்தில் உள்ள ஒருங்கிணைப்பு சுமூகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.