ஜோகூர் பாரு:
நவம்பர் 28 முதல் 29 வரை சிகாமாட் மற்றும் தங்காக் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அறிவித்துள்ளது.
மலாக்கா ஜலசந்தியில் தற்போது குறைந்த காற்றழுத்த வானிலை அமைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பகாங் முழுவதும் காற்றழுத்தம் கிழக்கு நோக்கி நகரக்கூடும் என்றும் முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக, ஜோகூர் வடக்கு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக MetMalaysia தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி, மாநில அரசும் பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் முழுமையான விழிப்புடன் இருப்பதாகவும், ஆற்று நீர் மட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து, தளவாடங்களை ஒருங்கிணைத்து, நிலைமை மோசமடைந்தால் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு அருகே வசிக்கும் மக்கள், வானிலை தகவல்களை தொடர்ந்து கவனித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.