Offline
Menu
‘டித்வா’ புயல்; இலங்கையில் உயிரிழப்பு 159 ஆக அதிகரிப்பு – சுமார் 200 பேர் மாயம்
By Administrator
Published on 12/01/2025 08:30
News

கொழும்பு:

இலங்கையில்டித்வாபுயலால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு சுமார் 200 பேரை இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

 

தலைநகர் கொழும்பின் வட பகுதியில் களனி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவருவதாகவும், அப்பகுதியில் இன்னமும் வெள்ள அபாயம் இருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்தது.

டித்வா புயலால் ஒரு வாரமாக அங்குப் பலத்த மழை பெய்துவருகிறது. “புயல் இப்போது கடந்துவிட்டாலும் களனி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது,” என்று பேரிடர் நிர்வாக நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

 

புயலின் சீற்றத்தால் ஏற்பட்ட சேதத்தைக் கையாள்வதற்காக அதிபர் அனுர குமார திசநாயக்க, சனிக்கிழமை (நவம்பர் 29) நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அனைத்துலக உதவிக்கும் அவர் அறைகூவல் விடுத்தார்.

 

இந்தியா உதவிப்பொருள்களையும் மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களையும் அனுப்பிவைத்தது.

ஜப்பான், உடனடித் தேவைகளை மதிப்பிட ஒரு குழுவை அனுப்பவிருப்பதாகச் சொன்னது. மேலும் உதவிசெய்யத் தயாராய் இருப்பதாகவும் அது கூறியது.

 

இந்நிலையில் இலங்கைத் தீவு முழுதும் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. ஆயினும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்திய பகுதிகளில் சில சாலைகள் அணுகமுடியாத நிலையில் உள்ளன.

 

டித்வா புயலால் 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன. ஏறக்குறைய 122,000 பேர் அரசாங்கத்தின் தற்காலிக இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ளத்தால் இடம்பெயர நேரிட்ட மேலும் 833,000 பேருக்கு உதவி தேவைப்படுகிறது.

 

மீட்புப் பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத் தரப்பினருடனும் தொண்டூழியர்களுடனும் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி வருகின்றனர்.

 

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் மின்சார விநியோகமும் தண்ணீர் விநியோகமும் தடைபட்டுள்ளன.

Comments