சிங்கப்பூர்:
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து கடற்படைகள் இணைந்து நடத்திய முத்தரப்பு கடல்சார் பயிற்சி ‘சிட்மெக்ஸ்-25’ (SITMEX-25) நவம்பர் 29 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்தப் பயிற்சி நவம்பர் 23 முதல் 29 வரை நடைபெற்றது.
பயிற்சியின் முதல் கட்டம் சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தில் தொடங்கியது. இதில் மூன்று நாட்டுக் கடற்படைகளும் கலந்து கொண்டு தொடர்புத் திறன் மேம்பாடு, கப்பல் இயக்கம், ஒருங்கிணைவு, குழுத் தொழிற்பாடு போன்ற துறைகளில் பல்வேறு அணுகுமுறைப் பயிற்சிகளை மேற்கொண்டன. மேலும், நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சி உட்பட பல தொழில்நுட்ப செயலாக்கங்களும் நடத்தப்பட்டன.
பயிற்சியின் இரண்டாம் கட்டமான ‘Sea Phase’ நவம்பர் 26 முதல் 29 வரை அனைத்துலக கடல்சார் எல்லைகளில் நடைபெற்றது. இதில் மூன்று நாடுகளின் கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள் இணைந்து சிக்கலான சூழல்களை எதிர்கொள்வதற்கான பல்வேறு ஒருங்கிணைந்த கடற்படை நடவடிக்கைகளைச் செய்து முடித்தன.
இந்த முத்தரப்பு பயிற்சி,
- இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வது,
- கடல்சார் கூட்டுறவை வலுப்படுத்துவது,
- பகிரப்பட்ட பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவது
என்ற குறிக்கோள்களை வலியுறுத்துகிறது.
‘சிட்மெக்ஸ்-25’ன் நிறைவு விழா நவம்பர் 29 அன்று புக்கெட்டில் நங்கூரமிட்டிருந்த ‘RSS Dauntless’ கப்பலில் நடைபெற்றது. இதில் மூன்று நாடுகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டு, இந்தப் பயிற்சியின் மூலம் கிடைத்த கூட்டு அனுபவங்கள், பரஸ்பர கற்றல் மற்றும் மேம்பட்ட கடல்சார் உறவுகளை கொண்டாடினர்.
பணிக் குழுத் தளபதி மற்றும் ‘RSS Dauntless’ கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எர் ஜின் கியாட், விழாவில் உரையாற்றி கூறியதாவது:
“கடல்சார் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் சிக்கலாகவும் வருகின்றன. நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் நாடுகடந்த இயல்புடையவை. அதனால் ‘சிட்மெக்ஸ்’ போன்ற கூட்டுப்பயிற்சிகள் இன்றியமையாதவை. எந்த ஒரு கடற்படையும் தனியாக இவ்வாறான ஆபத்துகளை சமாளிக்க முடியாது.”
இம்மூன்று நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2019 ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட ‘சிட்மெக்ஸ்’ தொடர் பயிற்சிகள் வருடந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.