மலாக்கா:
மலாக்கா மாநிலம் டுரியான் துங்கால் பகுதியில் அமைந்துள்ள ஃபெடரல் நெடுஞ்சாலையில் FT033-ல் நேற்று இரவு ஏற்பட்ட பெரிய குழி (sinkhole) அருகிலுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 10 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பள்ளம் திடீரென உருவானதால், சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் ஆரம்பக்கட்ட விசாரணை முடிவுகளின்படி, சாலையின் 10 முதல் 11 மீட்டர் ஆழத்தில் இருந்த, 1.8 மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தடி வடிகால் (underground drainage) கட்டமைப்பு மாற்றமடைந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர் என்று, பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எச்சரிக்கை பலகைகள் உடனடியாக நிறுவப்பட்டுள்ளன என்றும், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு வழிப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர்சேதம் அல்லது காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.
அதே நேரத்தில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க, அந்த சாலையின் முழு நீளத்திலும் அமைந்துள்ள அனைத்து நிலத்தடி வடிகால் அமைப்புகளும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சாலை பழுது பார்க்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.