Offline
Menu
ஸ்தாப்பாக் விபத்து: ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இடைநீக்கம் — மலேசிய செம்பிறை சங்கம் அதிரடி!
By Administrator
Published on 12/24/2025 08:30
News

கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள ஒரு சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் தொடர்புடைய ஆம்புலன்ஸ் ஊழியர்களை, போலீஸ் விசாரணை முடியும் வரை மலேசிய செம்பிறை சங்கம் (MRC) பணியிடை நீக்கம் செய்துள்ளது.

நேற்று (டிசம்பர் 22) காலை 8:10 மணியளவில், ஸ்தாப்பாக், ஜாலான் உசாவான் 6 (Jalan Usahawan 6) சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டது.

 

அவசர விளக்குகள் மற்றும் சைரன் ஒலிக்க வந்த ஆம்புலன்ஸ், சிவப்பு சிக்னலில் சந்திப்பிற்குள் நுழைந்தபோது கார் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதன் தாக்கத்தால் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மற்ற வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

 

விபத்தின் போது ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை. கோம்பாக் செத்தியா மக்கள் வீட்டுத் திட்டப் பகுதியில் (PPR) இருந்த நோயாளி ஒருவரை அழைத்து வரச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர், 9 வயது சிறுமி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


மேலும் 40 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சிறுமி உட்பட மற்ற அனைவரும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர்.

 

மலேசிய செம்பிறை சங்கத்தின் பொதுச்செயலாளர் டத்தோ டானியல் இஸ்கந்தர் அப்துல் ரஹ்மான் இது குறித்துக் கூறுகையில்: “உள்நிலை நெறிமுறைகளின்படி, விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.”

 

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தந்தையை எங்களது பிரதிநிதிகள் சந்தித்து ஆதரவு வழங்கியுள்ளனர். மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும்என்றார்.

 

கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தரப்பில், இந்தச் சம்பவம் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 43(1) (கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்துதல்) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments