மலேசியாவின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் குழு, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைச் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தது. இந்தக் குழுவிற்குப் பினாங்கு மாநில எக்ஸோ உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தலைமை தாங்கினார்.
மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இடையே விளையாட்டுத் துறை, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் வர்த்தகத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாகப் பினாங்கில் வசிக்கும் தமிழர்களின் நலன் மற்றும் அங்குத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பினாங்கில் விரைவில் ஒரு பிரம்மாண்டமான உள்விளையாட்டுத் திடல் (Indoor Stadium) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத் தமிழக அரசின் விளையாட்டுத் துறை ஆலோசனைகளை நாடுவது குறித்தும் பேசப்பட்டது. இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.