மூவார்:
15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முஹமட் அனிக் ஷபில் முகமட் சஹாரில் (21) என்ற இளைஞர், இன்று மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் பத்து பகாட்டில் (Batu Pahat) உள்ள ஒரு வீட்டில் வைத்து அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி காய்ச்சலுக்காக மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றபோது, அவர் 20 வாரக் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கும் அந்தச் சிறுமிக்கும் 2024-ஆம் ஆண்டு முதல் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
நீதிபதி முகமட் கைரி ஹரோன் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த இளைஞர் மறுத்து, விசாரணை கோரினார்.
தண்டனைச் சட்டத்தின் 376(1) பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம். நீதிமன்றம் அவருக்கு 10,000 ரிங்கிட் பிணை வழங்கியதுடன், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பிற்காக மார்ச் 19-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.