கோலாலம்பூர்:
பொதுச் சேவை ஊதிய முறையின் (SSPA) இரண்டாம் கட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி 22, 2026 (வியாழக்கிழமை) அன்று ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் பின்வரும் விகிதங்களில் சம்பள உயர்வு வழங்கப்படும்:
ஆதரவு மற்றும் மேலாண்மை-தொழில்முறை குழுக்கள்: இவர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படுகிறது (இதில் முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட உயர்வும் அடங்கும்). மற்றயது உயர் மேலாண்மை குழு (KPT): இவர்களுக்கு 7 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்தச் சம்பள உயர்வு கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி ஆசிரியர்கள் பெற்று வந்த அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
கல்வி அமைச்சின் மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் (Budget) 80 சதவீதம் பணியாளர்களின் ஊதியத்திற்காகவே ஒதுக்கப்படுகிறது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 2024 மே மாதம் அறிவித்தபடி, சிவில் ஊழியர்களுக்கான இந்தச் சம்பள உயர்வு டிசம்பர் 2024-இல் முதல் கட்டமாகவும் (Phase 1), ஜனவரி 2026-இல் இரண்டாம் கட்டமாகவும் (Phase 2) அமல்படுத்தப்படுகிறது.
இந்தச் சம்பள உயர்வு ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் பணித் திறனை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.