Offline
Menu

LATEST NEWS

சபாக் பெர்னாமில் அதிரடி சோதனை: 79 சட்டவிரோத குடியேறிகள் கைது!
By Administrator
Published on 06/13/2026 08:00
News

சபாக் பெர்னாம்:

பாகான் நக்கோடா ஒமார் (Bagan Nakhoda Omar) கடற்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட கூட்டு அமலாக்கப் பிரிவினரின் அதிரடி சோதனையில், மொத்தம் 79 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை சிலாங்கூர் துணைப் போலீஸ் தலைவர் டெபுடி கமிஷனர் முகமட் ஜைனி அபு ஹசான் (Mohd Zaini Abu Hassan) உறுதிப்படுத்தியுள்ளார்.

சிலாங்கூர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பில், நள்ளிரவு 1 மணியளவில் இந்த வேட்டை தொடங்கப்பட்டது. இதில் போலீஸ், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA), குடிநுழைவுத் துறை, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை உட்பட பல்வேறு கூட்டரசு மற்றும் மாநில முகமைகளைச் சேர்ந்த 250 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கடலோரக் குடியிருப்புகள் மற்றும் இறங்குதுறைகளில் மொத்தம் 125 நபர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 69 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் என மொத்தம் 79 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 21 இந்தியர்கள்,17 இந்தோனேசியர்கள், 17 மியன்மார் நாட்டினர்,16 பாகிஸ்தானியர்கள், 5 வங்காளதேசத்தினர் மற்றும் 2 தாய்லாந்து நாட்டினர் ஆகியோர் அடங்குவர் என்று அவர் கூறினார்.

“நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் அரசாங்கம் எப்போதும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சிலாங்கூர் எல்லைகளில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் எல்லை கடந்த குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய முகமட் ஜைனி கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது பின்வரும் குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன: முறையான பயண ஆவணங்கள் இல்லாமை மற்றும் விசா காலம் முடிந்து தங்கியிருத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேறிகளுக்குப் புகலிடம் அளித்தல், போதைப்பொருள் புழக்கம் மற்றும் மீன்பிடி சட்ட விதிமீறல்கள் மற்றும் மானிய விலையிலான டீசலை முறைகேடாகப் பயன்படுத்தி கடத்த முயன்ற இரண்டு வழக்குகள் என்பன அடங்கும்.

இதுமட்டுமின்றி, சபாக் பெர்னாம் கடற்பகுதி வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற மேலும் 28 இந்தோனேசிய குடிமக்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட, படகு மாலுமிகள் (Tekong) என சந்தேகிக்கப்படும் 7 உள்ளூர் ஆண்கள் ‘மனிதக் கடத்தல் மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007’-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் கும்பல், போலீசாரிடம் சிக்காமல் இருக்க கடலோர கிராமங்களில் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பாளர்களை (Lookouts) நியமித்து மிகவும் ரகசியமாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் தரும் முதலாளிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள போலீசார், எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments

More news