Offline
Menu
போதைப்பொருள் கடத்தல்: 3 கிலோ கஞ்சாவுடன் ஹாங்காங்கில் மலேசிய வாலிபர் கைது! புக்கிட் அமான் உறுதி
By Administrator
Published on 07/17/2026 09:00
News

கோலாலம்பூர்:

சுமார் 3 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மொட்டுகளை (Cannabis buds) கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ், 19 வயதுடைய மலேசிய வாலிபர் ஒருவர் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை மலேசியப் போலீசார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தத் தகவலை ஹாங்காங் அதிகாரிகள் மலேசியப் போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

கைது செய்யப்பட்ட 19 வயது வாலிபர் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர். மலேசியாவில் இவர் மீது இதற்கு முன் எந்தவொரு குற்றப் பின்னணியும் (Criminal Record) இல்லை.

இவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஹாங்காங் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், அந்த வாலிபரின் சரிபார்க்கப்பட்டப் பயணப் பெட்டியிலிருந்து (Checked baggage) 3 கிலோ கிராம் கஞ்சா மொட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் சந்தை மதிப்பு சுமார் HK$500,000 (RM260,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, இந்த வாலிபர் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலால் (Drug Syndicate) பண ஆசை காட்டப்பட்டு, போதைப்பொருள் கடத்தும் ‘குருவி’யாக (Drug Mule) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார். ஹாங்காங் சுங்கத்துறையினர் அந்த வாலிபரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாங்காங்கின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின்படி (Dangerous Drugs Ordinance), போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக HK$5 மில்லியன் (RM2.6 மில்லியன்) அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments