Offline
Menu
அரசுப் பணிகளில் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்
By Administrator
Published on 07/20/2026 11:00
News

துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் அழைப்பு!

மலேசியப் பொதுத்துறையில் இந்தியச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில், அதிக அளவிலான இந்திய இளைஞர்கள் அரசுப் பணிகளில் (Civil Service) சேர முன்வர வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். யுனேஸ்வரன், இங்கு நடைபெற்ற ‘ஜாலினான் மெஸ்ரா’ (Jalinan Mesra) சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது சில முக்கிய புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்:

கடந்த 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியாவின் ஒட்டுமொத்த அரசுப் பணியாளர்களில் இந்தியர்கள் வெறும் 3.7 விழுக்காடு (48,190 பணியாளர்கள்) மட்டுமே உள்ளனர். பொதுச்சேவை ஆணையத்தின் (SPA) 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 38,005 இந்தியர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 4,516 பேர் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்பட்டனர்.

நேர்காணலில் கலந்துகொண்ட 3,672 பேரில், இறுதித் தேர்வாக 991 பேருக்கு மட்டுமே அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டது.

நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சில விண்ணப்பதாரர்கள் அதில் கலந்துகொள்ளத் தவறுவது, அரசுப் பணிகளில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைகிறது என்று யுனேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஎம் (SPM), எஸ்டிபிஎம் (STPM) மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசுப் பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவது மற்றும் நேர்காணல்களை எதிர்கொள்வது குறித்த சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் இந்நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பொதுச்சேவை ஆணையம், சுகாதார அமைச்சு, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை இளைஞர்களுக்கு வழங்கினர்.

 

Comments