Offline
Menu

LATEST NEWS

கோத்தா பாருவில் 80,000 கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் – 26 வயது இளைஞர் கைது!
By Administrator
Published on 07/28/2026 15:00
News

கோத்தா பாரு, லுண்டாங் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், சுமார் 80,000 கடத்தல் சிகரெட்டுகளைப் பொது பாதுகாப்புப் படையினர் (PGA) பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இன்று அதிகாலை 3 மணியளவில், பொது பாதுகாப்புப் படையின் (PGA) 7-ஆவது பட்டாலியன் பிரிவினர் ‘ஓப்ஸ் தாரிங் வாவாசான்’ திட்டத்தின் கீழ் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக தென்கிழக்கு பிராந்திய பொது பாதுகாப்புப் படை கமாண்டர் சீனியர் அசிஸ்டண்ட் கமிஷனர் அஹ்மத் ராட்ஸி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

 

இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 75,000 வெள்ளைச் சிகரெட்டுகளும் (Rokok putih), 4,800 க்ரீடெக் சிகரெட்டுகளும் (Rokok kretek) பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் ஒட்டுமொத்த மதிப்பு 150,000 ரிங்கிட்டிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இச்சம்பவத்தில் அந்த வளாகத்தில் பணிபுரிந்து வந்த 26 வயது ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணையின் போது, தான் மாதம் RM1,200 சம்பளத்திற்கு இங்குப் பணியாற்றி வருவதாகவும், இந்தச் சிகரெட்டுகள் அனைத்தும் அப்பகுதி வாழ் மக்களுக்குச் சில்லறை விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிகரெட் விநியோகம் தொடர்பான அனைத்துக் காரியங்களையும் வளாகத்தின் உரிமையாளரே கவனித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த வழக்கு 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(e)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments

More news