Offline
Menu
சமயப் பள்ளி கட்டிடத்திலிருந்து குதிக்க முயன்ற 14 வயது மாணவி: சாதுரியமாக மீட்ட காவல் துறை அதிகாரி!
By Administrator
Published on 07/29/2026 16:00
News

கோலா திரெங்கானுவில் உள்ள ஒரு சமயப் பள்ளி கட்டிடத்தின் 2-ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற 14 வயது மாணவியை, மாவட்டக் காவல் துறைத் தலைவர் சாதுரியமாகப் பேசிப் பாதுகாப்பாக மீட்டுள்ளார்.

இன்று காலை கோலா திரெங்கானு மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அஸ்லி முகமது நூர் நடத்திய விரைவான மற்றும் திறமையான பேச்சுவார்த்தை மூலம் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக இருந்த அந்த 14 வயது மாணவியிடம் ACP அஸ்லி முகமது நூர் சுமார் 10 நிமிடங்கள் வரை பொறுமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது மனதை மாற்றினார். மாணவியின் கவனத்தைத் திருப்பி, மெதுவாக அவரை நெருங்கி அவரது கையைப் பிடித்துப் பாதுகாப்பாகக் கீழே அழைத்து வந்தார்.

மீட்கப்பட்ட மாணவி முதலில் பள்ளியின் முதலுதவி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சுல்தானா நூர் ஜாஹிரா (Sultanah Nur Zahirah) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்று காலை 9:33 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்று, கோலா திரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் தொய்யிபா தாயிப் கூறினார்.

உடனே 7 மீட்பு வீரர்கள் மற்றும் ஒரு வாகனத்துடன் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் முதற்கட்டத் தகவலின்படி, அந்த மாணவி தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்ளும் எண்ணத்தை தனது பாடப் புத்தகத்தில் (Exercise book) எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

காவல் துறை அதிகாரியுடன் இணைந்து தீயணைப்பு வீரர்களும் மாணவியைச் சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Comments