Offline
Menu
ஃபாரஸ்ட் சிட்டியில் செயல்பட்ட ஆன்லைன் மோசடி மையங்கள் முறியடிப்பு: 335 பேர் அதிரடி கைது!
By Administrator
Published on 07/29/2026 16:00
News

ஜோகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பங்களா வீடுகளை மையமாகக் கொண்டு இயங்கி வந்த பிரம்மாண்ட ஆன்லைன் மோசடி கும்பல்களைப் போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். இதில் வெளிநாட்டினரைக் குறிவைத்து போலி கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் காதல் மோசடிகளில் ஈடுபட்ட 335 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 15 அன்று நடத்தப்பட்ட இந்தச் சோதனை குறித்த விவரங்களை ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்ஷாத் (Datuk Ab Rahaman Arsad) இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் 20 முதல் 58 வயதுக்குட்பட்ட 309 சீனா, 19 இந்தோனேசியா, 4 மியன்மார் மற்றும் 3 மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஃபாரஸ்ட் சிட்டியில் இயங்கி வந்த 27 அடுக்குமாடி குடியிருப்புகள் (Apartments) மற்றும் 5 பங்களா வீடுகளில் ஒரே நேரத்தில் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

RM1 மில்லியன் மதிப்பிலான 313 கணினிகள், 1,557 கைப்பேசிகள், 17 மடிக்கணினிகள், 10 மோடம்கள் (Modems) மற்றும் ஒரு மஸ்டா CX-8 SUV வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பல வெளிநாட்டினரிடம் முறையான பயண ஆவணங்கள் (Travel documents) இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 (ஏமாற்றுதல்), பிரிவு 120B (சதித்திட்டம்) மற்றும் குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) ஆகியவற்றின் கீழ் 23 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் ஒப்புதலுடன், கைது செய்யப்பட்டவர்களில் 194 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன. இதில் 159 பேர் இன்றே ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

இக்கடத்தல் மற்றும் மோசடி கும்பலின் தலைவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், ‘இன்டர்போல்உதவியுடன் அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்.

Comments