Offline
Menu
உலு லங்காட் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
By Administrator
Published on 08/01/2026 15:00
News

போதைப்பொருள் பயன்படுத்திய கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்!

உலு லங்காட்டில் கடந்த புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற கொடூர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை 42 வயது ஆடவர் இன்று நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஃபாட்டின் தயானா ஜலீல் முன்னிலையில் முகமட் நோரஸ்லான் முகமட் தாமியிஸ் என்ற நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வாசித்துக்காட்டப்பட்ட போது அவர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

கடந்த ஜூலை 29, காலை 7:56 மணியளவில் ‘ஜாலான் பத்து 17 ஹுலு லங்காட்’ பகுதியில், எதிர்த்திசையில் தவறாக ஓட்டி வரப்பட்ட எஸ்டபிள்யூவி (SUV) கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஹஃபிஃபி ரஹ்மாத் (வயது 34), நிக் ஆயிஷா அசிலா நிக் முகமத் ஜம்சூரி (வயது 32) மற்றும்

முஹம்மது ரஃபி ஹன்சல் ஹஃபிஃபி (வயது 3) ஆகிய அவரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் ‘மெத்தாம்பெட்டமைன்’ (Methamphetamine) போதைப்பொருளைப் பயன்படுத்திய நிலையில் வாகனத்தை இயக்கியுள்ளார். அவர் மீது 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1)(a)-இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM50,000 முதல் RM100,000 வரை அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தடை விதிக்கப்படலாம்.

இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு பிணையாளருடன் RM1,0000 தொகையில் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. மேலும், எதிரி மாதம் ஒருமுறை அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையையும் விதித்தது.

ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக இவ்வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments