Offline
Menu
மலேசியாவில் மீண்டும் புகை மூட்டம்
By Administrator
Published on 08/17/2026 16:00
News

3 பகுதிகளில் ‘ஆரோக்கியமற்ற’ காற்றுத் தரம் பதிவு!

மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு மற்றும் புகைமூட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று மாலை 4 மணி நிலவரப்படி நாட்டின் 3 பகுதிகளில் ‘ஆரோக்கியமற்ற’ (Unhealthy) காற்றுத் தூய்மைக் கேடு குறியீடு (API) பதிவாகியுள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் ‘காற்றுப் மாசுபாட்டுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின்’ (APIMS) தரவுகளின்படி, சரவாக்கின் செரியான் மாவட்டப் போலீஸ் தலைமையகப் பகுதி நாட்டில் மிக அதிகபட்சமாக 157 எனும் API அளவைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாகச் சமரஹான் பகுதி 151 எனும் API அளவைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது இடமாக சிலாங்கூர் மாநிலத்தின் ஜோஹான் செத்தியா பகுதி 124 எனும் API அளவை எட்டியுள்ளது.

அதேவேளையில், நாடு முழுவதிலும் உள்ள பிற 65 கண்காணிப்பு மையங்களில் காற்றுத் தரம் ‘மிதமான’ (Moderate) நிலையில் பதிவாகியுள்ளது.

மலேசியாவில் காற்றுத் தரம் 0 – 50: நன்று (Good), 51 – 100: மிதமானது (Moderate), 101 – 200: ஆரோக்கியமற்றது (Unhealthy), 201 – 300: மிகவும் ஆரோக்கியமற்றது (Very Unhealthy), 300-க்கு மேல்: அபாயகரமானது (Hazardous) என்ற அளவுகோல்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 68 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் மணிநேரத்திற்கு ஒருமுறை API குறியீடுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

 

Comments