Offline
Menu
வீட்டையே கெத்தும் நீர் தயாரிப்பு மையமாக மாற்றிய தம்பதி கைது
By Administrator
Published on 08/19/2026 16:00
News

குவாந்தான், கம்போங் புக்கிட் ரங்கினில் உள்ள வீடு ஒன்றை கெத்தும் (Ketum) நீர் தயாரிக்கும் மையமாகப் பயன்படுத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 16 அன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

குவாந்தான் மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் (NCID) பிற்பகல் 4 மணியளவில் மேற்கண்ட வீட்டை முற்றுகையிட்டு 52 வயதுடைய கணவரையும், அவரது 62 வயதுடைய மனைவியையும் கைது செய்தனர்.

அந்த வீட்டிலிருந்து 187 கிலோ கெதும் இலைகள், சமையல் எரிவாயு உருளைகள், அடுப்பு, வடிகட்டிகள், தராசு மற்றும் கெத்தும் நீர் காய்ச்சப் பயன்படுத்திய பாத்திரங்களுடன், நெகிழிகளில் அடைக்கப்பட்ட கெத்தும் நீரும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு RM15,745 என மதிப்பிடப்பட்டுள்ளது.

6 குற்றப் பின்னணிகளைக் கொண்ட கணவர், கடந்த ஒரு மாதமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் வாரத்திற்குச் சுமார் 300 கிலோ கெத்தும் இலைகளைக் கிலோ RM40 வீதம் வாங்கி, அதை நீராகக் காய்ச்சி குவாந்தான் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

கெத்தும் நீர் தயாரிப்பிலும் விற்பனையிலும் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் குவாந்தான் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்தார்.

சந்தேகநபர்களான தம்பதியருக்கு ஆகஸ்ட் 19 வரை நீதிமன்றத் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து 1952-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 30(3)-இன் (Section 30(3) Poisons Act 1952) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM100,000 அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Comments