Offline
Menu
LHDN வரிக் கட்டணத்திற்கான பணத்தில் கையாடல்: முதன்மை நிதி அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
By Administrator
Published on 08/20/2026 16:00
News

தனியார் உயர்கல்விக்கூடம் (IPTS) ஒன்றின் முதன்மை நிதி அதிகாரியாகப் (CFO) பணியாற்றிய பெண் ஒருவர், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான RM6.56 மில்லியன் தொகையை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்காக இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

55 வயதான நோரைனி ஆரிபின் என்ற அந்தப் பெண், நீதிபதி டத்தின் எம். குணசுந்தரி முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தான் செய்யவில்லை எனக்கூறி விசாரணையைக் கோரினார்.

உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு (LHDN) செலுத்துவதற்காக அந்தத் தனியார் உயர்கல்விக்கூடத்தால் ஒதுக்கப்பட்ட RM6,557,720 பணப் பொறுப்பு நோரைனியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அப்பணத்தை LHDN-க்குச் செலுத்தாமல் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீலாய், பண்டார் என்ஸ்டெக்கில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியின் அலுவலகத்தில் செப்டம்பர் 2025 முதல் ஏப்ரல் 2026 வரையிலான காலகட்டத்தில் இக்குற்றச் செயல் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 409-இன் (Seksyen 409 Kanun Keseksaan) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை,பிரம்படி, மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Comments