கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) சரக்கு போக்குவரத்து மையங்கள் வழியாக நடைபெறும் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, தீபகற்ப மலேசிய வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Perhilitan) தனது K9 மோப்ப நாய் படையைப் பயன்படுத்தி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
KLIA கார் கோ எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறையுடன் (AKPS) இணைந்து, கடந்த ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை சுமார் ஒரு மாத காலமாக இந்த சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மரப்பெட்டிகள், காகிதக் கூடுகள் மற்றும் சுமைப் பலகைகளில் (Pallets) மறைத்து வைக்கப்படும் வனவிலங்கு பாகங்களின் வாசனையைக் கண்டறிய K9 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
யானைத் தந்தங்கள், அழுங்கு (Pangolin) செதில்கள், புலி எலும்புகள் மற்றும் பெட்டிகளுக்குள் உயிருடன் கடத்தப்படும் அரிய வகை வனவிலங்குகளை மோப்பம் பிடித்துக் கண்டறியும் திறன் கொண்டவை இந்த K9 நாய்கள்.
விமான நிலையச் சரக்கு மையங்களைப் பாதுகாப்பான பாதையாக நினைத்து வனவிலங்குகளைக் கடத்த முனையும் சர்வதேசச் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை கடுமையான எச்சரிக்கையாக அமையும் என Perhilitan தெரிவித்துள்ளது.
நாட்டின் எல்லைகளிலும் முக்கியப் போக்குவரத்து மையங்களிலும் சோதனைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் 1-800-88-5151 என்ற இலவசத் தொலைபேசி எண் வழி அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.