கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (NCID) மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் RM8.3 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட நபரை வைத்து, அதனுடன் தொடர்புடைய மற்றொரு வளாகத்தையும் போலீசார் முற்றுகையிட்டதாக, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கோலாலம்பூர் போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ ஃபாதில் மார்சுஸ் கூறினார்.
சோதனையின் போது உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 கிலோகிராம் மெத்தம்பேட்டமின் மற்றும் 30 கிலோகிராம் எக்ஸ்டாசி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
போதைப்பொருள் (சொத்து பறிமுதல்) சட்டம் 1988-இன் கீழ், சந்தேகநபரிடமிருந்து RM85,000 மதிப்பிலான Proton X50 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபர் தலைமறைவாக உள்ள தனது கூட்டாளிகளுடன் இணைந்து நடப்பாண்டு தொடக்கத்திலிருந்து இந்தச் சட்டவிரோதச் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
முன்னாள் குற்றப் பின்னணி எதுவுமில்லாத அச்சைந்தேகநபருக்கு ஆகஸ்ட் 20 வரை 11 நாட்கள் நீதிமன்றத் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவரது குடியுரிமை தொடர்பான விபரங்களை போலீசார் தொடர்ந்து சரிபார்த்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் (Section 39B Dangerous Drugs Act 1952) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டணிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த முக்கியப் புள்ளிகளைக் கண்டறியும் புலனாய்வு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.