Offline
Menu
குடிவநுழைவுத் துறை லோரி விதிகளைப் பின்பற்றியதா?
By Administrator
Published on 08/21/2026 14:00
News

கோலாலம்பூர் சுல்தான் இஸ்மாயில் சாலையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் அவரது இரு மகள்கள் உயிரிழக்கக் காரணமான குடிநுழைவுத் துறை (JIM) லோரி விபத்து தொடர்பாக, ‘டேஷ்கேம்’ (Dashcam) மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிப் பதிவுகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் இதுகுறித்துக் கூறுகையில், விபத்துக்குள்ளான குடிநுழைவுத் துறை லோரி புதிய வாகனம் என்றும், அதில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேம் பதிவுப் பெட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு வாகனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகத் துறை சார்ந்த வழிகாட்டுதல்கள் உள்ளன. ஓட்டுநர் அந்த விதிகளைச் சரியாகப் பின்பற்றினாரா என்பது குறித்தத் துறை ரீதியிலான உள்ளக விசாரணையும் தனியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விபத்தின் போது 43 வயதுடைய லோரி ஓட்டுநர் மட்டுமே வாகனத்தில் இருந்துள்ளார். சோதனையில் பிடிபட்ட சட்டவிரோதக் குடியேறிகளை அழைத்து வரச் சௌக்கிட் நோக்கிச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது என்று, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஜாம்சூரி முகமட் ஈசா கூறினார்.

தாயாரின் நிலைமை: விபத்தில் படுகாயமடைந்து கோலாலம்பூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள தாய் நோர்ஹயாதி ரசாலியிடம் (55) இதுவரை போலீசார் வாக்குமூலம் பெறவில்லை. அவர் குணமடைந்து மனநிலை சீரடைய போலீசார் அவகாசம் அளித்துள்ளனர்.

சிவப்பு விளக்கு எரிந்த சந்திப்பில் அவசர எச்சரிக்கை விளக்கு மற்றும் சைரனுடன் நுழைந்த குடிநுழைவுத் துறை லோரி, பச்சை விளக்கில் சென்ற ‘புரோட்டான் சாகா’ காரின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் வீதியைக் கடக்கக் காத்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாதசாரிகள் மீது பாய்ந்ததில் ஷேக் முகமட் ஃபிர்தாவுஸ் (53) மற்றும் அவரது மகள்கள் சித்தி நோர் சாஸ்லின் (25), சித்தி தார்விஷா (12) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Comments