Offline
Menu
போதைப்பொருள், லஞ்சம், குற்றவியல் வழக்குகள்: 67 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
By Administrator
Published on 08/21/2026 15:00
News

கெடா மாநிலத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதற்காக 90 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கெடா மாநிலப் போலிஸ் தலைமையகத்தில் (IPK Kedah) நடைபெற்ற 69-வது சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கெடா மாநிலப் போலிஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட 90 நபர்களில் 11 உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளும் (PKP), 76 கீழ்நிலை போலீஸ் அதிகாரிகளும் (PRP), 3 சிவில் பணியாளர்களும் (PA) அடங்குவர். இவர்கள் மீது மொத்தம் 69 ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக் கோப்புகள் (KST) திறக்கப்பட்டுள்ளன என்றார்.

நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவியல் வழக்குகள் (33), போதைப்பொருள் பயன்பாடு (24), ஊழல் (7), வணிகக் குற்றங்கள் (4) மற்றும் ஷரியா சட்ட மீறல்கள் (3) ஆகியவை அடங்கும்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 294 நபர்கள் மீதான 155 விசாரணைக் கோப்புகள் திறக்கப்பட்டன. ஒப்பீட்டளவில் நடப்பாண்டில் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், காவல்துறைத் தலைவராக இது இன்னமும் கவலையளிக்கும் விஷயமே என்று அவர் குறிப்பிட்டார்.

பதவிகளைப் பொருட்படுத்தாமல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்:

2021 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்தில் 67 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக போதைப்பொருள் தொடர்பில் 25 பேரும், குற்றவியல் வழக்குகளில் 19 பேரும், லஞ்ச ஒழிப்பு முகமையின் (SPRM) விசாரணையில் 16 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments