சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்தி, சட்டவிரோதமாக அடைத்து வைத்து, கொள்ளையடித்துக் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாகப் பெண் ஒருவர் உட்பட ஆறு நபர்கள் மீது இன்று ஜோகூர் பாருவில் உள்ள இரு வேறு நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர் அஸியாதி ஜாஃபர் முன்னிலையில், எம். பாலமுருகன் (46), கே. சரவணன் (40), பி. ஸ்ரீதேவி (41), ஜி. புகனேஸ்வரன் (41), எஸ். கோபிநாத் (38) மற்றும் எக்ஸ். எட்வின் நிக்கோலஸ் (41) ஆகிய 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 8 அன்று மதியம் 2 மணியளவில், ஸ்கூடாய், தாமான் ஸ்ரீ ஓர்கிட்டில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன்பாகச் சிங்கப்பூர் ஆடவர் ஒருவரைக் கடத்தி, அவரை விடுவிக்க SG$20,000 (RM63,703.64) கப்பத் தொகை கேட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் தொடரப்பட்ட வழக்கின் குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுத்தனர். நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் RM50,000 பிணைத் தொகையைச் செலுத்தி, கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிட்டது. இக்குற்றத்திற்கு 40 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிபதி மதிஹா ஜைனோல் முன்னிலையில், பாலமுருகன், சரவணன், கோபிநாத் ஆகிய மூவர் மீது ரோலக்ஸ் (Rolex) கடிகாரம் மற்றும் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்ததற்காகக் குற்றவியல் சட்டப்பிரிவு 395-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ. ஷார்மினி முன்னிலையில், ஆகஸ்ட் 11 அன்று தாமான் ஸ்கூடாய் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிங்கப்பூர் பெண் ஒருவரை ரகசியமாக அடைத்து வைத்ததற்காக ஆறு பேர் மீதும் குற்றவியல் சட்டப்பிரிவு 365-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூர் ஆடவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதை ஒப்புக்கொண்ட சரவணன் மற்றும் புகனேஸ்வரன் ஆகிய இருவருக்கும் குற்றவியல் சட்டப்பிரிவு 324-இன் கீழ் தலா RM3,000 அபராதம் விதிக்கப்பட்டது மேலும் அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதச் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் மேலதிக நிபந்தனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்குகளின் மறுவிசாரணை மற்றும் வழக்கறிஞர்களை நியமிப்பதற்காக நீதிமன்றம் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.