Offline
Menu
8 மாதங்களில் 5 சம்பவங்கள்: பாலிங் மலைப் பகுதிகளில் அதிகரிக்கும் மலை ஏற்ற விபத்துகள்!
By Administrator
Published on 08/24/2026 15:00
News

பாலிங் மலையில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்து மயக்கமடைந்ததை அடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றுக் காலை 11.58 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் தெரிவித்தார்:

கூலிமில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் அப்பெண், தனது 6 நண்பர்களுடன் இணைந்து பாலிங் மலையில் ஏறத் தொடங்கியுள்ளார். அடிவாரத்திலிருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, அப்பெண்ணுக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த 8 தீயணைப்பு வீரர்கள், மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர். பாறை நிறைந்த கரடுமுரடான மற்றும் செங்குத்தான பாதை காரணமாக அவரைத் தூக்குப்படுக்கையில் (Stretcher) வைத்து கீழே கொண்டு வருவது பெரும் சவாலாக அமைந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களின் உதவியுடன் சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் மலை அடிவாரத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டார்.

பாலிங் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் மலையேற்றத்தின் போது மயக்கமடைதல், கீழே விழுதல் மற்றும் மூச்சுத்திணறல் தொடர்பாக 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Comments