Offline
Menu
கெத்தேரேயில் கொடூர விபத்து: லோரி – மோட்டார் சைக்கிள் மோதியதில் வயதான தம்பதி பலி!
By Administrator
Published on 08/25/2026 17:00
News

இன்று காலை கிளந்தான், கெத்தேரேயில் உள்ள கம்போங் பயா லடாவில் லோரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 74 வயது முதியவரும் அவரது 62 வயது மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காலை 9:30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இட்ரிஸ் சே ஙா மற்றும் அவரது மனைவி அசீசா சே எம்போங் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.

“இன்று காலை நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கடையில் காலை உணவு சாப்பிட்டோம். என் தந்தைக்கு 2 வாரங்களுக்கு முன்பு லேசான பக்கவாதம் (Stroke) ஏற்பட்டு உடல்நிலை முழுமையாகக் குணமடையாததால், அவர் தும்பாட், பெங்காலான் கூபோருக்குச் செல்வதைத் தடுக்க முயன்றேன். ஆனால், தாய்லாந்து குடியுரிமை பெற்ற என் தாயாரின் கடவுச்சீட்டில் (Passport) முத்திரை (Stamp) குத்துவதற்காகப் பெங்காலான் கூபோர் குடிநுழைவு மையத்திற்குச் சென்றே தீருவேன் எனத் தந்தை பிடிவாதமாக இருந்தார்” என்று, மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் உயிரிழந்த தம்பதியின் 35 வயது மகன் முகமட் ஷஹாபுதீன் இட்ரிஸ் கூறினார்.

தாய்லாந்து குடியுரிமை பெற்ற தாயின் கடவுச்சீட்டு முத்திரைக்காகத் தந்தை ஆண்டுதோறும் அவரை அங்கு அழைத்துச் செல்வதும், பின்னர் அப்பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் செல்வதும் வழக்கமான ஒன்று என அவர் தெரிவித்தார்.

காலை 10 மணியளவில் கோலக் கிராய் விடுதியில் வேலையில் இருந்தபோது, தாயாரின் கைபேசியில் இருந்து வந்த அழைப்பின் மூலம் தந்தை மற்றும் தாய் விபத்தில் சிக்கிய சோகச் செய்தியை அவர் அறிந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த புகார் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்திய கோத்தா பாரு மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முகமட் அஸ்மீர் டமிரி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

உடற்கூறாய்வு நடவடிக்கைகள் முடிந்த பின்னர், தம்பதியரின் உடல்கள் கம்போங் கெனோர் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

 

Comments