Offline
Menu
பினாங்கு விமான நிலைய கழிப்பறையில் தொப்புள் கொடியுடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கை குழந்தை!
By Administrator
Published on 09/03/2026 08:00
News

பாயான் லெப்பாஸில் உள்ள பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் (LTAPP) கழிப்பறையில், தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் புதிதாகப் பிறந்த கை குழந்தை ஒன்று குப்பைத் தொட்டியில் உயிருடன் வீசப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேற்று (செப்டம்பர் 1) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதைச் சமூக வலைத்தளப் பயனர் ஒருவர் காணொளி மூலம் பகிர்ந்துள்ளார்.

விமான நிலையத்தின் கழிப்பறையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள குப்பைத் தொட்டியைச் சுத்தம் செய்தபோது தொப்புள் கொடியுடன் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

“ஒரு குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசும் அளவிற்கு எப்படித்தான் மனசாட்சியின்றி கொடூரமாக நடந்து கொள்கிறார்களோ, இறைவா!” என்று அச்சம்பவத்தைப் பதிவிட்ட இணையப் பயனர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கை குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற நபரின் இரக்கமற்ற செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் குழந்தை இல்லாத தங்களின் ஏங்கலான சூழலையும், இத்தகைய கொடூரச் செயல்களையும் ஒப்பிட்டுத் தங்கள் மனக்குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், இச்சம்பவம் குறித்து போலிசார் அல்லது அதிகாரப்பூர்வத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ விளக்கமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments