பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil & Gas) நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 66 வயது முதியவர் ஒருவர், தொலைபேசி வழி மோசடிக் கும்பலின் (Phone Scam) பொறியில் சிக்கித் தமது ஆயுள் சேமிப்பான RM1.417 மில்லியன் (சுமார் 14.17 லட்சம் ரிங்கிட்) தொகையைப் பறிகொடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் முதல் நேற்று (செப்டம்பர் 1) வரையிலான காலகட்டத்தில் இந்த ஏமாற்றுச் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி பாதிக்கப்பட்ட முதியவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், அவர் சட்டவிரோதப் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகப் பயமுறுத்தியுள்ளார், பின்னர் அதிகாரிகளின் சோதனைக்காக அக்ரோபேங்க் (Agrobank) கணக்கு ஒன்றை புதிதாகத் தொடங்குமாறு அம்முதியவரை அவர்கள் பணித்துள்ளனர் என்று, பகாங் மாநில பதில் போலிஸ் தலைமை அதிகாரி டத்தோ அஸ்ரி அக்மார் ஆயோப் கூறினார்.
கணக்கைத் தொடங்கியதும், முதியவரின் குடியிருப்புப் பகுதிக்கு நேரில் வந்த மர்ம நபர் ஒருவரிடம், அந்த வங்கியின் அட்டை மற்றும் கடவுச்சொல் (PIN Number) ஆகியவற்றை முதியவர் ஒப்படைத்துள்ளார்.
அதன் பின்னர், சந்தேக நபர்களின் வழிகாட்டுதலின்படி தமது மலேசிய ஊழியர் சேமநிதியம் (KWSP), அமானா சஹாம் பெர்ஹாட் (ASB), தபுங் ஹாஜி (Tabung Haji) ஆகியவற்றிலிருந்த சேமிப்புப் பணம் மற்றும் நகைகளை அடகு வைத்த பணம் என மொத்தம் RM1,417,210 தொகையை அந்த அக்ரோபேங்க் கணக்கில் முதியவர் செலுத்தியுள்ளார்.
நேற்று அந்தக் கணக்கை ஆய்வு செய்தபோதே, தமது அனுமதியின்றி அப்பணம் 6 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு ஏடிஎம் (ATM) மூலம் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதை அவர் உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் (ஏமாற்றுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள போலிஸ் நிலையத்தை அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணப் பரிவர்த்தனைகளுக்கு முன் ‘செமாக் முல்’ (Semak Mule) இணையதளத்தைச் சரிபார்க்கவும், மோசடிக்கு ஆளானால் உடனடியாக தேசிய மோசடி மறுமொழி மையத்தின் (NSRC) 997 என்ற அவசர எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.