Offline
Menu
தேசா பார்க் சிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம்
By Administrator
Published on 09/03/2026 09:00
News

கோலாலம்பூர், தேசா பார்க்சிட்டி (Desa ParkCity) குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ‘காதல் மோசடி’ (Love Scam) குறித்து முன்னதாக எந்தவொரு போலிஸ் புகாரும் செய்யவில்லை என்று போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோலாலம்பூர் மாநகரப் போலிஸ் தலைமை அதிகாரி டத்தோ ஃபாதில் மார்சஸ் கூறுகையில், போலிஸ் தரவுத்தளத்தில் சோதனையிட்டதில் பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பிலிருந்து இது தொடர்பாக எவ்விதப் புகாரும் பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த மரணங்கள் குறித்த விசாரணை குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் (கொலை வழக்கு) கீழ் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணையைப் பாதிக்காத வகையில் தற்போதைய சூழலில் மேலதிக விவரங்களை வெளியிட இயலாது,” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிற்பகல் 3.32 மணியளவில், பெர்சியாரான் ரெசிடென் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்திலிருந்து 48 வயது ஆண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த போலிஸார், தீயணைப்புத் துறையின் உதவியோடு அந்த வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வெவ்வேறு அறைகளில் 3 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் அந்த நபரின் 47 வயது மனைவி, 9 வயது மகள் மற்றும் 7 வயது மகன் ஆவர்.

பிரேதப் பரிசோதனையில், சிறுவர்கள் இருவரும் கழுத்தில் குத்தப்பட்ட காயங்களினாலும், தாய் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களினாலும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட பலத்த காயங்களால் தந்தை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சாப்பாட்டு மேசையிலிருந்து கடிதம் ஒன்றை போலிசார் கைப்பற்றினர். அதில், ‘காதல் மோசடி’ காரணமாக RM260,000 (சுமார் 2.6 லட்சம் ரிங்கிட்) நிதியிழப்பும் கடனும் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments