கோலாலம்பூர் – கேசாஸ் (KESAS) விரைவுச்சாலையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையம் அருகே ‘டொயோட்டா ஹயேஸ்’ (Toyota Hiace) ரக வேன் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானதில், சிறுவன் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
இன்று நடைபெற்ற இந்த விபத்தில் வேனின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் பலத்த காயங்களுடன் சிக்கிக் கொண்டார். மற்ற 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
சம்பவம் குறித்துக் கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்குப் (PGO) கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, புக்கிட் ஜாலில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“டிரெய்லர் லோரியின் பின்புறத்தில் வேன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரைத் தீயணைப்பு வீரர்கள் சிறப்புச் சாதனங்களைப் பயன்படுத்திப் போராடிப் பத்திரமாக வெளியே மீட்டனர்,” என்று, செயல்பாட்டுக் தளபதி முகமட் ரெட்ஸுவான் முகமட் ராணி கூறினார்.
காயமடைந்தவர்களில் 3 பேர் உடனடியாகக் கோலாலம்பூர் மருத்துவமனைக்கும் (HKL), 6 பேர் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கும் (PPUM) மேலதிகச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு நபரின் நிலை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.