Offline
Menu
திடீரென ‘U-Turn’ செய்ததால் வந்த துயரம்: லோரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
By Administrator
Published on 09/09/2026 15:00
News

சாலையில் திடீரென ‘யு-டர்ன்’ (U-Turn) செய்ய முயன்ற ‘டெஸ்டெக்’ (Kolej Tesdec) தொழிற்கல்விக் கல்லூரி மாணவர் ஒருவர், பின்னால் வந்த லோரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாராங்கிலுள்ள கம்போங் ரூ ரெண்டாங் அருகே உள்ள புக்கிட் கோர் சாலையில் இன்று பிற்பகல் 1.10 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்தில் ‘ஹோண்டா C100’ ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயது முகமட் அஃபிக் இஸுடீன் அசார் என்ற மாணவர், தலையிலும் உடலின் பல இடங்களிலும் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்று, மாராங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுபரின்டென்டன் சாரி முகமட் கூறினார்.

“சம்பவத்தின் போது, உயிரிழந்த மாணவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும், 34 வயது நபர் ஓட்டிச் சென்ற லோரியும் மாராங் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. சம்பவ இடத்தை அடைந்ததும், மாணவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரெனத் திரும்பி ‘யு-டர்ன்’ செய்ய முயன்றுள்ளது. அப்போது பின்னால் வந்த லோரியால் உடனடியாக வண்டியைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது,” என்று தெரிவித்தார்.

உலு திரெங்கானுவைச் சேர்ந்த அந்த மாணவரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (HSNZ) தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments