Offline
Menu
கடனை அடைக்க 77 இடங்களில் தீவைப்பு & பெயிண்ட் வீச்சு – 35 வயது ஆடவர் கைது!
By Administrator
Published on 09/09/2026 14:00
News

சட்டவிரோதக் கந்துவட்டிக் (ஆலோங்) கும்பலிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் போனதால், பிற கடனாளிகளின் வீடுகளுக்குத் தீ வைப்பது மற்றும் பெயிண்ட் வீசுவது போன்ற கொடூரக் செயல்களில் ஈடுபட வற்புறுத்தப்பட்ட 35 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை 7-ஆம் தேதி ‘ஓப் சிம்பா’ என்ற சிறப்புச் சோதனையின் போது, ‘புரோட்டான் சாகா’ ரகக் காரில் இருந்த அந்த நபரைப் பேராக் மாநிலக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

“கைது செய்யப்பட்ட நபர் ஆரம்பத்தில் கந்துவட்டிக் கும்பலிடம் கடன் வாங்கித் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். அதனால், அந்தச் சட்டவிரோதக் கும்பல் இவரைப் பயன்படுத்தி, கடன் கட்டாத மற்ற நபர்களின் வீடுகள் மற்றும் வாகனங்களுக்குத் தீவைப்பது, பெயிண்ட் வீசுவது, வீடுகளைப் பூட்டிவிட்டு மிரட்டல் கடிதம் வைத்து வருவது போன்ற செயல்களில் ஈடுபடுத்தியுள்ளது என்று, பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

ஆரம்ப விசாரணையில், இவர் இதுபோன்ற 77 குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்காக அவருக்கு ஒரு வேலைக்கு RM100 முதல் RM400 வரை கூலி வழங்கப்பட்டுள்ளது.”

இவற்றில் 57 சம்பவங்கள் பேராக் மாநிலத்திலும், 15 சம்பவங்கள் கெடாவிலும், 5 சம்பவங்கள் பினாங்கிலும நடந்துள்ளன.

சநதேக நபருக்குத் ‘Touch ‘n Go eWallet’ கணக்கு மூலமாகக் கூலிப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோதக் கும்பல் சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர் பேஸ்புக் மற்றும் தொலைபேசி வாயிலாகவே இக்கூட்டத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

சோதனையின் போது அவரிடமிருந்து கார், பெயிண்ட் டப்பாக்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், லைட்டர், மிரட்டல் கடிதங்கள் மற்றும் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டப் பிரிவுகள் 435, 427 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பாரிட் புந்தார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கெனவே 2 குற்றப் பின்னணிகள் உள்ளதோடு, சபா மாநிலத்தில் நடைபெற்ற மோசடி வழக்கு ஒன்றிலும் இவர் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments