Offline
Menu
நஜிப்பின் வீட்டுக்காவல் விவகாரம் மலாக்கா தேர்தலில் PH வாக்குகளைப் பாதிக்காது
By Administrator
Published on 11/10/2026 14:00
News

மலாக்கா,

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விவகாரம் மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டமை தொடர்பான சர்ச்சைகள், வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியின் வாக்குகளைப் பாதிக்காது என்று மலாக்கா PH தலைவர் அட்லி சஹாரி தெரிவித்துள்ளார்.

 

நஜிப்பின் வீட்டுக்காவல் விவகாரம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தாலும், அதன் காரணமாக PH ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பார்கள் என்று தாம் கருதவில்லை என அவர் கூறியுள்ளார்.

 

PH ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளே முக்கியமானவையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

PH ஆதரவாளர்களிடையேயும் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை போன்ற விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளையில், மலாக்கா மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு PH தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மலாக்கா மக்களின் ஆதரவுடன்தான் நாம் வெற்றி பெற வேண்டும், என்றும் அட்லி சஹாரி கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த நவம்பர் 6ஆம் தேதி SRC International வழக்கில் நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதாக அம்னோ அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்காவல் விவகாரம் தேர்தல் பிரசாரத்தின் முதல் வார இறுதியில் முக்கிய பேசுபொருளாக மாறியது.

 

நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான அரச மன்னிப்பின் அடிப்படையில், அபராதத்தைச் செலுத்திய பின்னர் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments