கோலா பெராங்,
திரெங்கானு மாநிலத்தில் பிறந்த குழந்தையின் சடலத்தை வடிகாலில் வீசி, குழந்தை பிறந்ததை மறைத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும் 5,000 ரிங்கிட் அபராதமும் விதித்து கோலா பெராங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உணவக ஊழியரான நூர் அய்ன் அடிலின் முகமட் ரோபிசா என்ற பெண், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி இரவு 10 மணியளவில் பாடாங் செத்தெங்கே பகுதியில் உள்ள குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்தின் வடிகாலில் தனது குழந்தையின் சடலத்தை வீசி, குழந்தை பிறந்ததை மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நூர் அதிரா ஹாஷிம் அவருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும் 5,000 ரிங்கிட் அபராதமும் விதித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 318ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சட்டப்பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதனிடையே, தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் நோர் அசியா புனாவான், குற்றஞ்சாட்டப்பட்ட பெண் இளம் வயதுடையவர் என்றும், பதற்றத்தின் காரணமாக இச்செயலில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் நீதிமன்றத்தின் நேரத்தையும் அரசுத் தரப்பின் நேரத்தையும் மிச்சப்படுத்தியுள்ளதாகவும், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மீண்டும் இத்தகைய தவறைச் செய்யமாட்டேன் என்று உறுதியளித்துள்ளதாகவும் கூறி, குறைந்தபட்சத் தண்டனையாக அபராதம் மட்டும் விதிக்குமாறு கோரியுள்ளார்.
எனினும், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் நூர் அனித் நபிலா ருஸ்லி, இந்தச் சம்பவம் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் சொந்தக் குழந்தையுடன் தொடர்புடையது என்பதால், மனிதாபிமானக் காரணங்களைக் கருத்தில்கொண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தண்டனை அமைய வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கம்போங் பாடாங் செத்தெங்கே குடியிருப்புப் பகுதியில் உள்ள வடிகாலில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக உலு திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ஷாருடின் அப்துல் வஹாப் தெரிவித்திருந்தார்.
குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது தலை மற்றும் ஒரு கை காணப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.