Offline
Menu
பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி!
By Administrator
Published on 11/13/2026 13:00
News
143 புதிய பணியிடங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல்

மலேசியாவில் பொதுமக்களுக்கான சட்ட உதவிச் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய அரசாங்கத் தரப்பு தற்காப்பு வழக்கறிஞர் அலுவலகத்தை (Public Defender’s Office) அமைப்பதற்கு 143 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய அலுவலகத்திற்கு JUSA C தரத்திலான உயர் அதிகாரி ஒருவர் தலைமை தாங்குவார் என்றும், பணியிடங்களை உருவாக்குவதற்கான நிதி அமைச்சின் ஒப்புதல் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளதால், அதிகாரிகளை விரைவில் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்ட உதவித் துறையின் (JBG) சேவைகளை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையுடன் (YBGK) இணைந்து புதிய அலுவலகம் செயல்படும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் சட்ட உதவி தேவைப்படும் பொதுமக்களுக்கு மேலும் விரிவான சேவைகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான சட்ட உதவி மற்றும் பொதுத் தற்காப்புச் சட்டத் திருத்தங்கள், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மாற்றாகப் பொதுமக்கள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள உதவும் வகையில், மடானி சமரச மையத்தின் (PMM) சேவைகளும் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதற்காக நடத்தப்பட்ட தொழில்முறை சமரசப் பயிற்சியின் ஆறு கட்டங்களில் 210 பேர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் RM680,000 ஒதுக்கப்பட்டிருந்தது.

பாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மடானி சமரச மையத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வழிகாட்டிக் கையேட்டையும் அமைச்சர் அஸாலினா அறிமுகப்படுத்தினார்.

Comments