மலேசிய அரசாங்கம் புதிதாகக் கடன் வாங்குவது படிப்படியாகக் குறைந்துள்ள போதிலும், மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, பக்காத்தான் ஹராப்பான் (ஈப்போ தீமோர்) நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் லீ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேசியக் கடன் ஏன் இன்னும் நிலையான நிலைக்குக் குறைக்கப்படவில்லை என்றும், மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்ள நாட்டின் நிதி நிலைமையில் போதிய இடமிருக்கிறதா என்றும் ஹோவர்ட் லீ கேள்வி எழுப்பியிருந்தார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், முக்கியச் செலவின விபரங்களை வெளியிட்டார்: அதில் ரஹ்மா உதவித் திட்டங்கள் (STR & SARA): 16 பில்லியன் ரிங்கிட், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு: 18 பில்லியன் ரிங்கிட்.,எரிபொருள் மானியங்கள்: 40 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அரசாங்கம் புதிதாகப் பெறும் கடன்களின் அளவு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் விளக்கினார்: இதில் 2021 & 2022: தலா 100 பில்லியன் ரிங்கிட், 2023: 92.6 பில்லியன் ரிங்கிட், 2024: 76.8 பில்லியன் ரிங்கிட் மற்றும் 2025: 75.6 பில்லியன் ரிங்கிட்டாக குறைந்துள்ளது என்றார்.
“நமது கடன் சுமை குறைந்து வருகிறது; புதிதாக வாங்கும் கடனின் அளவையும் நாம் குறைத்துள்ளோம். ஆனால், அதேவேளையில் மக்களுக்கான செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன,” என அவர் குறிப்பிட்டார்.