Offline
Menu
சீன நிறுவனங்களுடன் பிரதமர் அன்வார் பேச்சுவார்த்தை!
By Administrator
Published on 11/19/2026 15:00
News
மலேசியாவில் புதிய தொழில்நுட்ப முதலீடுகள்!

மலேசியாவில் புதிய தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, Fastprint மற்றும் Fastrain நிறுவனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்தார்.

 

இந்தச் சந்திப்பில் கணினிச் சில்லுகள் (Semiconductors), நவீன மின்னணு சாதனங்கள், ஒளியிழைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், மின்கலங்கள் மற்றும் மின்சாரச் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் தொடர்பான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

இந்தத் துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மலேசியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கும் தூய்மையான எரிசக்திப் பயன்பாட்டிற்கும் உதவும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

 

மேலும், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் மலேசிய மக்களுக்கு நேரடிப் பயன்கள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

குறிப்பாக, அதிகத் திறன் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பங்களை மலேசியாவுக்குக் கொண்டுவருதல் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

 

இதற்காகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்விப் பயிற்சி நிலையங்களுடன் (TVET) ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இதனிடையே, சீனாவின் Fastprint நிறுவனம் கெடா மாநிலத்தின் கூலிம் உயர் தொழில்நுட்பப் பூங்காவில் புதிய மின்னணுச் சுற்றுப் பலகைகள் (PCB) தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்டான் சோ உறுதிப்படுத்தியுள்ளார்.

 

1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Fastprint நிறுவனம், மின்னணு சாதனங்களுக்கான சுற்றுப் பலகைகள் மற்றும் வன்பொருள் மாதிரிகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றதாகும். சீனா மற்றும் பிரிட்டனிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

 

மற்றொரு நிறுவனமான Fastrain, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான மின்னணு உபகரணங்கள், அதிவேகத் தகவல் தொடர்புச் சாதனங்கள், வாகன மின்னணு உபகரணங்கள் மற்றும் கடல்சார் தகவல் தொடர்புச் சாதனங்களைத் தயாரித்து வருகிறது.

 

இந்த முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக மலேசிய முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சும் (MITI), மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையமும் (MIDA) சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் எனப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Comments