மலேசிய இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு, நலன் ஆகியவற்றுக்கு வரவுசெலவுத் திட்டம் 2027-இல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 35 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு (MITRA) வழங்கப்படும் நிதி 10 கோடி ரிங்கிட்டிலிருந்து 15 கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதில் இந்நிதி கவனம் செலுத்தும்.
தொழில்துறை நவீனத் தொழில்நுட்பம், விமானப் பராமரிப்பு, வாகனத் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சி வழங்குவதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தகுதியை உயர்த்துவது இதன் நோக்கமாகும். இதனுடன், வெற்றி மடானி (VETRI MADANI) திட்டத்துக்கு 2 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், பட்டதாரிகளுக்குத் தொழில்துறையின் தேவைக்கேற்ற திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோருக்கு உதவ தெக்குன் நேஷனல் (TEKUN Nasional), அமனா இக்தியார் மலேசியா (AIM) ஆகிய அமைப்புகள் மூலம் மொத்தம் 15 கோடி ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதில் தெக்குன் நேஷனலின் SPUMI Goes Big திட்டத்தின் கீழ் 10 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. அமனா இக்தியார் மலேசியா மூலம் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு சிறுகடன் வழங்குவதற்காக 5 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவித் திட்டங்கள் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு எவ்வாறு துணையாக இருக்கின்றன என்பதைப் பயனாளிகளின் அனுபவங்களும் எடுத்துக்காட்டுகின்றன.
எம்.கே.எஸ் மார்ட் அங்காடியின் உரிமையாளர் மணிமாறன் இயமலை, இவ்வாண்டு தெக்குன் நேஷனல் மூலம் ஒரு லட்சம் ரிங்கிட் நிதியுதவி பெற்றதாகக் கூறினார். இந்த நிதி தனது வணிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற நிதியுதவிகள் தொடர்ந்து கிடைத்தால் தன்னைப் போன்ற சிறு வணிகர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றார். 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மேலும் பல இந்தியத் தொழில்முனைவோர் பயனடைய வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.