Offline
Menu
உலகின் சிறந்த 10 வீதிகளில் பினாங்கின் பீச் ஸ்ட்ரீட்! 9ஆவது இடத்தைப் பிடித்து சாதனை!
By Administrator
Published on 11/19/2026 15:00
News

உலகின் சிறந்த 28 வீதிகளின் பட்டியலில், பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ் டவுனில் அமைந்துள்ள பீச் ஸ்ட்ரீட் (Beach Street) 9ஆவது இடத்தைப் பிடித்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

 

பிரபல சர்வதேச வாழ்க்கை முறை இதழான Time Out, 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 28 வீதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

அதில், லெபு பந்தாய் (Lebuh Pantai) என்றும் அழைக்கப்படும் பீச் ஸ்ட்ரீட், அதன் தனித்துவமான உணவகங்கள், காபி கடைகள், சிறிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கலை சார்ந்த நடவடிக்கைகளுக்காகப் பாராட்டப்பட்டுள்ளது.

 

ஜோர்ஜ் டவுனின் மிகவும் பழமையான வீதிகளில் ஒன்றான பீச் ஸ்ட்ரீட், இளம் தொழில்முனைவோரின் முயற்சிகளால் தற்போது புதிய வளர்ச்சியை அடைந்து வருவதாக Time Out குறிப்பிட்டுள்ளது.

 

குறிப்பாக, புதிய வகை உணவகங்கள், பழங்காலப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் இந்த வீதிக்கு மேலும் சிறப்புச் சேர்த்துள்ளன.

 

இங்கு அமைந்துள்ள Rembar உணவகம், தென்கிழக்காசிய உணவு வகைகளை நவீன முறையில் வழங்குவதற்காகப் பாராட்டப்பட்டுள்ளது.

 

அதேபோல், உலகின் சிறந்த காபி கடைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட Ome by Spacebar Coffee கடையும் இந்த வீதியின் முக்கிய இடங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், உள்ளூர் தயாரிப்புகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை விற்பனை செய்யும் Mano Plus Select Store, ஆடை விற்பனை நிலையமான Sixth Sense ஆகியவையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வேண்டிய இடங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 

1786 மற்றும் 1787ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பீச் ஸ்ட்ரீட், ஆரம்பத்தில் கடற்கரையை ஒட்டிய வீதியாக அமைந்திருந்தது. தற்போது அது ஜோர்ஜ் டவுனின் முக்கிய வரலாற்று மற்றும் வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

 

இதனிடையே, உலகின் சிறந்த வீதிகளுக்கான பட்டியலில் தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள சோங் வாட் சாலை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள கோல்போர்ன் சாலை இரண்டாவது இடத்தையும், அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் நகரில் உள்ள பெர்னாண்டஸ் டி என்சிசோ வீதி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

Comments