Offline
Menu
இரண்டு Toyota Hilux வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மியன்மார் நாட்டவர் பலி
By Administrator
Published on 11/23/2026 13:00
News
சிறுமிகள் உட்பட நால்வர் காயம்!

பேராக் மாநிலத்தில் சிம்பாங் பூலாயிலிருந்து கேமரன் மலையை நோக்கிச் செல்லும் சாலையில் இரண்டு Toyota Hilux நான்கு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், 28 வயதுடைய மியன்மார் நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு சிறுமிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய Toyota Hilux வாகனங்களில் ஒன்றில் பயணித்த ஐந்து மியன்மார் நாட்டவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்சி நோர் அகமட் தெரிவித்தார்.

அதே வாகனத்தில் பயணித்த 38 வயதுடைய ஆடவர், 32 வயதுடைய பெண் மற்றும் ஏழு, இரண்டு வயதுடைய இரண்டு சிறுமிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த 28 வயதுடைய மியன்மார் நாட்டவரைச் சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் வாகனத்திலிருந்து வெளியே மீட்டுள்ளனர். எனினும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

மற்றொரு Toyota Hilux வாகனத்தில் பயணித்தவர்கள் தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்னரே அங்கிருந்து சென்றுவிட்டதால், அவர்களது விவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments