Offline
அமெரிக்கர் மூவர் உட்பட 37 பேருக்கு மரண தண்டனை விதித்த ஆப்பிரிக்க நாடு
News
Published on 09/15/2024

கின்ஷாசா: ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கூறி, அமெரிக்கர் மூவர் உட்பட 37 பேருக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் ராணுவ நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 13) மரண தண்டனை விதித்தது.

கடந்த மே மாதம் 19ஆம் தேதி இடம்பெற்ற அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதித்திட்டம் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்பட்டது.ஆயுதமேந்திய ஆடவர்கள் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள அதிபர் அலுவலகத்தை குறுகிய நேரத்திற்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆயினும், அவர்களுடைய தலைவரும் அமெரிக்காவைச் சேர்ந்த காங்கோ அரசியல்வாதியுமான கிறிஸ்டியன் மலாங்காவைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

அவருடைய மகன் மார்செல் மலாங்கா, அவருடைய தொழில் பங்காளி பெஞ்சமின் ஸல்மான் பொலுன், மார்செலின் நண்பர் டைலர் தாம்சன் ஆகிய மூவரும் வழக்கை எதிர்கொண்டனர்.இறுதியில், அம்மூவர் மீதான குற்றவியல் சதி, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறி, மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னதாக, ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் பங்குபெறாவிடில் தன்னைக் கொன்றுவிடப்போவதாகத் தன் தந்தை மிரட்டினார் என்று மார்செல் மலாங்கா கூறியிருந்தார்.தன் மகன் அப்பாவி என்று மார்செலின் தாயார் பிரிட்னி சாயரும் தெரிவித்திருந்தார்.

பல்லாண்டுகளாகத் தன் தந்தையைக் காணாத நிலையில், அவரது அழைப்பை ஏற்று தான் காங்கோவிற்கு வந்தது இதுதான் முதன்முறை என்றும் மார்செல் சொன்னார்.அதுபோல், விடுமுறையைக் கழிப்பதற்காகத் தம்முடைய வளர்ப்பு மகன் காங்கோ சென்றதாகத் தாம்சனின் வளர்ப்புத் தாயார் மிராண்டா தாம்சனும் கூறியிருந்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பெல்ஜியம், காங்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான விசாரணையை எதிர்கொண்ட நிலையில், அவர்களில் 37 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் விசாரணையில் பங்குகொண்டனர் என்றும் நிலைமை அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அமெரிக்க அரசாங்கத்தின் பேச்சாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

Comments