உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.